தூத்துக்குடியில் 8 நடமாடும் உழவர் சந்தை மின்வாகனங்கள் துவக்கம் – விவசாயிகளுக்கு நேரடி விற்பனை வாய்ப்பு

தூத்துக்குடியில் 8 நடமாடும் உழவர் சந்தை மின்வாகனங்கள் துவக்கம் – விவசாயிகளுக்கு நேரடி விற்பனை வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பாக, சிறு மற்றும் குறு விவசாயிகளின் விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் 8 நடமாடும் உழவர் சந்தை மின்சார வாகனங்கள் இன்று துவக்கிவைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் கொடியசைத்து இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டம் என்.டி.பி.எல் (NTPL) நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR) பங்களிப்புடன், சுமார் ரூ. 36.28 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மூன்று சக்கர மின்சார ஆட்டோக்களாக வடிவமைக்கப்பட்டுள்ள 8 வாகனங்கள் விவசாயிகள் நேரடி விற்பனைக்கு பயன்படுத்தப்பட உள்ளன.

தூத்துக்குடி உழவர் சந்தைக்கு 6 வாகனங்களும், கோவில்பட்டி உழவர் சந்தைக்கு 2 வாகனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம்:

ஒட்டப்பிடாரம் வட்டாரம் – 62 வருவாய் கிராமங்கள்

கயத்தார் வட்டாரம் – 33 வருவாய் கிராமங்கள்

ஆழ்வார்திருநகரி வட்டாரம் – 57 வருவாய் கிராமங்கள்

கோவில்பட்டி வட்டாரம் – 32 வருவாய் கிராமங்கள்

பயனடைய உள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்ததாவது:

“விவசாயிகள் தங்களது தோட்டத்து விளைபொருட்களை நேரடியாக மக்களின் இல்லங்களுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் வாய்ப்பு இத்திட்டத்தின் மூலம் உருவாகியுள்ளது. இதனால் நுகர்வோருக்கு பசுமையான காய்கறிகள் குறைந்த விலையில் கிடைக்கும். மேலும் ஒரு விவசாயி நாளொன்றுக்கு ரூ.1000 வரை கூடுதல் வருமானம் ஈட்டும் சூழல் உருவாகும். விவசாயிகளை தொழில்முனைவோராக மாற்றுவதே எங்கள் நோக்கம்.”

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் க. கிருஷ்ணகுமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சௌ. மனோரஞ்சிதம், NTPL பொது மேலாளர் டி.ஏ. அரவிந்த்ராஜா, வேளாண் வணிகத் துணை இயக்குநர் சுதாமதி, விற்பனைக்குழுச் செயலாளர் ப. எழில் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.