“9 அம்ச கோரிக்கைகள்: தூத்துக்குடியில் சாலை மறியல் 3 தாசில்தார்கள் உட்பட 90 பேர் கைது”

“9 அம்ச கோரிக்கைகள்: தூத்துக்குடியில் சாலை மறியல் 3 தாசில்தார்கள் உட்பட 90 பேர் கைது”

அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு தாசில்தார்கள் ஞானராஜ், செல்வகுமார், சாமிநாதன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாலமுருகன், காளிராஜ், சந்திரசேகர், குமாரலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் முருகன் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

மேலும், முன்னாள் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் அன்புச்செல்வம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மகேந்திர பிரபு, சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர் ஜெயபாக்கியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். மாவட்டம் முழுவதிலிருந்தும் திரளான அரசு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அரசு ஊழியர்கள் பேரணியாகச் சென்று, பெரியார் சிலை முன்பாகச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 32 பெண்கள் உட்பட 90 பேரை, மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் மோகன் ஐயர் தலைமையிலான போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த போராட்டத்தின் காரணமாக தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களின் பணிகள் இன்று பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.