வரி கட்டவில்லை என்றால் தண்ணீரும் இல்லை..! தூத்துக்குடியில் 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்பை அதிரடியாக துண்டித்த மாநகராட்சி

வரி கட்டவில்லை என்றால் தண்ணீரும் இல்லை..! தூத்துக்குடியில் 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்பை அதிரடியாக துண்டித்த மாநகராட்சி

தூத்துக்குடி மாநகராட்சியில் நீண்ட காலமாக சொத்து வரி நிலுவையில் வைத்திருந்த 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக துண்டித்துள்ளனர்.

2025–26 நிதியாண்டு (31.03.2026 வரை) வரையிலான சொத்து வரி மற்றும் குடிநீர்க் கட்டணம் செலுத்தாத கட்டிடங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஜப்தி மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாநகராட்சி ஆணையரின் உத்தரவின்படி, கிழக்கு மண்டல உதவி ஆணையரின் மேற்பார்வையில் வார்டுகள் 24, 29, 38, 39 மற்றும் 41-ல் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் வடக்கு ரதவீதி, சந்தை ரோடு, மீனாட்சிபுரம் மேற்கு, பாளையங்கோட்டை ரோடு மற்றும் குரூஸ்புரம் பகுதிகளில் 2022–23 முதல் 2025–26 வரை சொத்து வரி செலுத்தாத 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்பட்டன. இந்த கட்டிடங்களின் நிலுவைத் தொகை ₹6,000 முதல் ₹95,000 வரை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், 3 நாட்களுக்குள் நிலுவை வரியை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் தங்களது சொத்து வரி, குடிநீர்க் கட்டணம், திடக்கழிவு மேலாண்மைக் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடைக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் உடனடியாகச் செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.