குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியார்மயமா? இஸ்ரோ தரப்பில் வெளியான முக்கிய விளக்கம்!

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியார்மயமா? இஸ்ரோ தரப்பில் வெளியான முக்கிய விளக்கம்!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் கட்டப்பட்டு வரும் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்புப் பணிகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் முதல் ராக்கெட் ஏவுதளம் செயல்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் குலசேகரன்பட்டினத்தில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. பூமத்திய ரேகைக்கு ஒப்பீட்டளவில் அருகில் அமைந்துள்ளதால், சிறிய ரக செயற்கைக்கோள்களை குறைந்த எரிபொருள் செலவில் விண்ணில் செலுத்துவதற்கு இந்த இடம் சாதகமானதாக கருதப்படுகிறது.

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்காக சுமார் 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, ரூ.986 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இஸ்ரோ அலுவலகம், ராக்கெட் ஏவுதளக் கட்டிடம், பராமரிப்புப் பணிமனை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 3 ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும் வகையில் ஹெலிபேட் வசதியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஏவுதளத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதன் செயல்பாடு மற்றும் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட தகுதியான தனியார் நிறுவனங்களிடம் இருந்து விருப்பம் கோரும் நடவடிக்கையை இந்திய தேசிய விண்வெளி அங்கீகார மற்றும் மேம்பாட்டு மையமான IN-SPACe மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்வு செய்யப்படும் தனியார் நிறுவனம் ஏவுதளத்தின் அன்றாட நிர்வாகம், செயல்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. இதன் மூலம் தனியார் விண்வெளி நிறுவனங்கள் தங்களது ராக்கெட்டுகளை குலசேகரன்பட்டினத்தில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியாருக்கு விற்கப்படுவதாக பரவி வரும் தகவல்களுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவுதளத்தின் உரிமை தனியாருக்கு மாற்றப்படவில்லை என்றும், ஏவுதளத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் அறிவிப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏவுதளத்தின் செயல்பாடு, நிர்வாகம் மற்றும் பராமரிப்புப் பணிகளை மட்டுமே தகுதியான தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், இது மத்திய அரசின் விண்வெளித் துறை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஏவுதளத்தின் நிர்வாகப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு உள்ளூர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏவுதளத் திட்டத்திற்காக பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது வீடுகள் மற்றும் நிலங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ள நிலையில், நிலம் வழங்கிய குடும்பங்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொதுத்துறை நிதியிலும், இஸ்ரோவின் தொழில்நுட்பத் திறனிலும் உருவாக்கப்படும் இந்த மிகப்பெரிய விண்வெளித் திட்டத்தின் பயன் உள்ளூர் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

கட்டுமானப் பணிகள் 2027 மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குலசேகரன்பட்டினம் ஏவுதளம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.