தூத்துக்குடியில் என்.டி. பி.எல் தொழிலாளர்கள் போராட்டம்..!!

தூத்துக்குடியில் என்.டி. பி.எல் தொழிலாளர்கள் போராட்டம்..!!

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்.டி.பி.எல். அனல் மின் நிலைய தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். 

என்.டி.பி.எல். அனல் மின் நிலையத்தில் பணி செய்யக்கூடிய தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளராக அறிவிக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வறை அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.டி.பி.எல். அனல் மின் நிலைய தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

கடந்த 13.02.2023 முதல் நடத்திய வேலை நிறுத்தம் நடைபெற்ற போது வேலை நிறுத்தம் தொடர்பான கோரிக்கைகளின் மீது 20.02.2023 அன்று சென்னையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையர் (நடுவண்) முன்னிலையில் எங்கள் தொழிற்சங்கத்திற்கும் அனல் மின் நிலைய நிர்வாகத்திற்கும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் ஏற்பட்ட ஒப்பந்தங்களை என்டிபிஎல் நிர்வாகம் அமலாக்கவில்லை.

இதனிடையே மதுரை மண்டல தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் கடந்த 11.05.2023 அன்று நடைபெற்ற சமசர பேச்சு வார்த்தையில் நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 07.08.2020 அன்று ஏற்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள வீட்டு வாடகைப்படி, பயணப்படி, உணவுப்படி, சலவைப்படி உள்ளிட்ட அனைத்து இதர படிகளும் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அதனடிப்படையில் ரூ82/- தினசரி வழங்கப்படும் எனவும், ESI காப்பிட்டு திட்டத்தில் வராத தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம் அமலாக்கப்படும் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேற்படி ஒப்பந்தம் இன்று வரை அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் NTPL நிர்வாகம் செய்த மேல் முறையீட்டில் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்சு கடந்த 15.11.2023 அன்று இடைக்கால நிவாரணமாக ரூ 100/- தினசரி வழங்க உத்திரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவில் கடந்த 01.06.2021 முதல் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என உத்திரவிட்டுள்ளது. இதனை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பு நூற்றுக் கணக்காண தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.