தூத்துக்குடி கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூல்: மாணவ, மாணவிகள் போராட்டம்!

தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு உயர் கல்வித் துறை நிர்ணயம் செய்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதலாக கட்டணம் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் ஏழை, எளிய மாணவ மாணவிகள் பாதிக்கப்படுவதாகவும், இது தொடர்பாக உயர்கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி முன்பு இன்று மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகளுடன் காவல் துறையினர், கல்லூரி நிர்வாகித்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் உள்ள வஉசி கல்லூரியில் கல்வி கட்டண உயர்வுக்கு எதிராக மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து வ.உ.சி கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.