கயத்தாறு அருகே தடுப்புச் சுவரில் அரசுப் பேருந்து மோதி விபத்து
கயத்தாறு அருகே மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவரில் அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
மதுரையில் இருந்து திருநெல்வேலிக்குச் சென்ற அந்த பேருந்தை, மதுரையை சேர்ந்த ஜெயபாண்டி ஓட்டிச் சென்றார். பேருந்தில் 50 பயணிகள் இருந்தனர். கயத்தாறு அருகே சாலைப்புதூர் சுங்கச் சாவடியைக் கடந்து சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கயத்தாறு - கழுகுமலை சந்திப்பில் இருந்த மின்விளக்கு கம்பத்தில் மோதி, சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் ஏறியது.
அப்போது பேருந்தின் முன்பக்க சக்கரங்கள் கழன்றன, முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. பேருந்தில் பயணம் செய்த மூதாட்டிக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். பின்னர் கிரேன் மூலம் பேருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.