தூத்துக்குடி மாவட்டத்தில் நவ.23, 24ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள்: ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் நவ.23 மற்றும் 24ஆம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்று ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2025 பணியானது 29-10-2024 முதல் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வாக்காளர்களிடமிருந்து மனுக்கள் பெற்று வருகின்றனர். மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியும் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், கடந்த 16-11-2024 மற்றும் 17-11-2024 ஆகிய நாட்களில் இரு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட படிவம்-6- 11554, (18-19 இளம் வாக்காளர் மனுக்கள் 6353), பெயர் நீக்கம் செய்திட படிவம் -7-976 மனுக்கள்,பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 மனுக்கள் 8136 , ஆதார் எண் இணைத்திட படிவம் 6பி மனுகள் -13 ம் ஆக மொத்தம் 20679 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. இந்நிலையில், மீதமுள்ள இரண்டு சிறப்பு முகாம்கள் 23-11-2024 (சனிக்கிழமை), 24-11-2024 (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்திற்கான படிவங்கள் படிவம்-6 - புதிய வாக்காளராக பதிவு செய்வதற்கு (ஜனவரி1,2025 அன்று அல்லது அதற்கு முன்பே 18 வயது பூர்த்தியாகியிருந்தால்), படிவம் -6 ஏ - வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு, படிவம்-6பி - வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணினை இணைப்பதற்கு, படிவம் 7 - பெயரினை நீக்கம் செய்வதற்கு (இறப்பு/இரட்டைபதிவு), படிவம் -8 - முகவரி மாற்றம்(ஒரே தொகுதிக்குள் மற்றும் தொகுதி மாற்றத்திற்கு), வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் பிழை இருப்பின் பதிவுகளை திருத்தம் செய்வதற்கு/நகல் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கு/மாற்றுதிறனாளி வகைபாட்டினை பதிவு செய்து கொள்ளலாம்.
எனவே, பொதுமக்கள் காலை 10 மணி முதல் 5.30 மணி வரை , வாக்குசாவடி அமைவிடங்களில், மேற்கண்ட தினங்களில், மேற்கண்ட படிவங்கள் அளித்து பலன் பெறலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. வாக்குசாவடி அமைவிட அலுவலர்கள், வாக்குசாவடி நிலை அலுவலர்கள் ,படிவங்கள் பெறுவதற்கும், பூர்த்தி செய்யவும் உதவி செய்வர் என்ற விபரமும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter helpline App என்கிற மெபைல் செயலி மூலமாகவும் உரிய ஆவணங்களுடன் பொது மக்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திடலாம். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி குறித்து பொதுமக்கள் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும்; உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களையோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண். 1950 னை தொடர்பு கொண்டு தங்களது சந்தேகம், கோரிக்கை தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட, நீக்கம் செய்திட,பிழை திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்திட மற்றும் ஆதார் எண் இணைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெருமளவில் சேர்த்திடவும், ஆதார் எண்ணினை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கேட்டுக் கொண்டுள்ளார்.