தூத்துக்குடி மாவட்டத்தில் இசை, கலை, இலக்கியத்திற்காக சங்கம் : கனிமொழி எம்பி தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் இசை, கலை, இலக்கியத்திற்காக சங்கம் : கனிமொழி எம்பி தகவல்!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட இலக்கிய கலை மற்றும் இசை சங்கத்தின் உறுப்பினர்களுக்கான பொதுக்குழு கூட்டம் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதா ஜீவன் அவர்கள் முன்னிலையில் இன்று (04.03.2023) நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி முதல் மே 1ஆம் தேதி வரை 4ஆவது புத்தகத் திருவிழா நடத்தப்பட இருக்கிறது. புத்தகத் திருவிழாவின் கடைசி 4 நாட்கள் நெய்தல் திருவிழாவும், உணவுத்திருவிழாவும் நடைபெறும். புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் எழுத்தாளர்கள், சொற்பொழிவாளர்கள், இலக்கியத்தை சார்ந்திருக்கக் கூடியவர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் மக்களிடம் பல்வேறு செய்திகளைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய அரங்குகள் அமைக்கப்படும். அதுமட்டுமல்லாமல், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கலைகள், இங்கே இருக்கக்கூடிய நிலம், மக்களின் வாழ்வு சார்ந்த புகைப்படங்களைக் கண்காட்சி அமைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், புகைப்படக் கலைஞர்களுக்கான புகைப்படக் கண்காட்சிப் போட்டி நடத்தப்படவுள்ளது. ஆகையால், புகைப்படக் கலைஞர்கள் போட்டியில் பங்கேற்றுக்கொள்ளலாம். ஒவ்வொருவரும் 5 புகைப்படங்களுக்கு மிகாமல் அனுப்ப வேண்டும். தேர்வுக்குழு உருவாக்கப்பட்டு, ஏப்ரல் 16ஆம் தேதிக்குள் அனுப்பப்படும் புகைப்படங்களில் சிறந்த புகைப்படங்களைத் தேர்வு செய்து முதல் பரிசு, இரண்டாம் பரிசு மற்றும் ஆறுதல் பரிசு வழங்கப்படும்.
மேலும், கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தில் தொடர்ந்து கலை, இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அந்த அரங்கம் தயாராக இருக்கிறது. ஆர்வம் இருப்பவர்கள் அங்கு நிகழ்ச்சிகளை நடத்தலாம். முதல் முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் இசை, கலை, இலக்கியத்திற்காக ஒரு சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த சங்கத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் திரு.சோ.தர்மன் அவர்கள், முத்தாலங்குறிச்சி திரு.காமராஜ் அவர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு, இங்கே இருக்கக்கூடிய மக்களுக்கு வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும், நம்முடைய கலைகள், வாழ்வியல் முறைகள் பற்றி இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், இங்கே இருக்கக்கூடிய எழுத்தாளர்களைக் கொண்டாடக்கூடிய ஒரு சங்கமாக இது செயல்படும். ஆய்வாளர்களுக்கும் உதவி செய்யக்கூடிய சங்கமாகவும் செயல்படும் என தெரிவித்தார்.
முன்னதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 70வது பிறந்ததினம் மற்றும் தூத்துக்குடி மாமன்ற பிரதிநிதிகள் பதவியேற்று ஓர் ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி மாநகராட்சி தருவைகுளம் உரக்கிடங்கில் 70,000 மரக்கன்றுகள் நடும் விழாவின் துவக்கமாக 10,000 மரக்கன்றுகள் நடும் பணியினை மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, புதிய பேருந்து நிலையம் போல்பேட்டை ரவுண்டானா அருகில் பெரியசாமி அறக்கட்டளை பங்களிப்பில் புதிய போக்குவரத்து சிக்னலையும், பாளையங்கோட்டை ரோடு சிதம்பரநகர் விலக்கு சிக்னலையும் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.பெ.ஜெகன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சி.சண்முகையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி திரு.தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், இ.ஆ.ப., நெடுஞ்சாலைத்துறை தூத்துக்குடி கோட்டப்பொறியாளர் திரு.ஆறுமுகநயினார், வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.விநாயகம், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சத்தியராஜ், பெரியசாமி அறக்கட்டளை நிறுவனர் திரு.பா.ஜீவன் ஜேக்கப், தூத்துக்குடி நகர போக்குவரத்து ஆய்வாளர் திரு.மயிலேறும்பெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.