தூத்துக்குடியில் தானியங்கி வானிலை மையம் ; 49 மழைமானி நிலையங்கள்: ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 49 தானியங்கி மழைமானி நிலையங்கள் மற்றும் 1 தானியங்கி வானிலை மையம் அமைய உள்ளன.
இது தொடர்பாக ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், நமது மாவட்டத்தில் தற்போது 19 இடங்களில் மழைமானிகள் செயல்பட்டு வருகின்றன. தினசரி பதிவாகும் மழை அளவை இந்த மழை மானிகள் மூலம் அளவீடு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது.
தற்போது வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியினை பயன்படுத்தி தானியங்கி சாதனங்கள் மூலம் மழை அளவை கணக்கிட தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 49 தானியங்கி மழைமானி நிலையங்கள் மற்றும் 1 தானியங்கி வானிலை மையம் பேரிடர் மேலாண்மையின் கீழ் அமைக்கப்படவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி வட்டத்தில் 5 மழைமானி நிலையங்களும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் 4 மழைமானி நிலையங்களும், திருச்செந்தூர் வட்டத்தில் 5 மழைமானி நிலையங்களும், சாத்தான்குளம் வட்டத்தில் 3 மழைமானி நிலையங்களும், ஏரல் வட்டத்தில் 2 மழைமானி நிலையங்களும், கோவில்பட்டி வட்டத்தில் 4 மழைமானி நிலையங்களும், ஒட்டப்பிடாரம் வட்டத்தில் 6 மழைமானி நிலையங்களும், விளாத்திகுளம் வட்டத்தில் 10 மழைமானி நிலையங்களும், எட்டயபுரம் வட்டத்தில் 5 மழைமானி நிலையங்களும் மற்றும் கயத்தார் வட்டத்தில் 5 மழைமானி நிலையங்களும் அமைய உள்ளது.
இதில் தூத்துக்குடி வட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் 20.02.2024 அன்று கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.2024 வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் இந்த மழைமானி நிலையங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வரும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.