மினிலாரியில் கடத்திய 5 ஆயிரம் லிட்டர் டீசல் பறிமுதல் : ஒருவர் கைது!

மினிலாரியில் கடத்திய 5 ஆயிரம் லிட்டர் டீசல் பறிமுதல் : ஒருவர் கைது!

மினிலாரியில் கடத்திய 5 ஆயிரம் லிட்டர் டீசல் பறிமுதல் : ஒருவர் கைது!

தூத்துக்குடி துறைமுகத்தில் கூடுதல் விலைக்கு விற்க மினி லாரியில் கடத்தி சென்ற 5 ஆயிரம் லிட்டர் டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் முன்பு வாகன தணிக்கை மேற்கொண்டனர். அங்கு வந்த ஒரு மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அந்த லாரியில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 35 பேரல்கள் இருந்தன.

அதனை போலீசார் சோதனை செய்த போது, ஒவ்வொரு பேரலிலும் தலா 150 லிட்டர் வீதம் 5 ஆயிரத்து 250 லிட்டர் டீசலை முறைகேடாக விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மினிலாரி டிரைவர் கோவை குனியமுத்தூர் பாலக்காடு மெயின் ரோட்டை சேர்ந்த பாபு சுல்தான் மகன் முகமது பாரிஸ் ஆலியப்பா (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் முறைகேடாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக டீசலை கொண்டு வந்தது தெரியவந்தது.

இது குறித்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து 5 ஆயிரத்து 250 லிட்டர் டீசல் மற்றும் மினிலாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த டீசல் கலப்படம் செய்யப்பட்டு உள்ளதா? என்பதை கண்டறிவதற்காக மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தை சேர்ந்த ஞானபிரகாசம் மற்றும் கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த நந்தகுமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.