திருச்செந்தூர், நெல்லையப்பர் கோயில் உள்பட 52 பெரிய கோயில்களில் இன்று முதல் செல்போன் பயன்படுத்த தடை!

திருச்செந்தூர், நெல்லையப்பர் கோயில் உள்பட 52 பெரிய கோயில்களில் இன்று முதல் செல்போன் பயன்படுத்த தடை!

தமிழ்நாட்டில் திருச்செந்தூர் முருகன் கோயில், நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட 52 முக்கியமான பெரிய கோயில்களில் பக்தர்கள் செல்போன்களை எடுத்துச் செல்ல இன்று (செப்.1) முதல் தடை அமலுக்கு வந்துள்ளது.

கோயில்களுக்குள் செல்போன்களைப் பயன்படுத்தி புகைப்படங்கள், வீடியோக்கள், செல்பிக்கள் மற்றும் ரீல்ஸ் உள்ளிட்டவற்றை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கோயில்களின் புனிதத்தன்மையையும், பக்தர்களின் ஆன்மிக உணர்வுகளையும் பாதுகாக்கும் வகையில், முக்கிய கோயில்களில் செல்போன் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பெட்டக வசதி

பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்காக கோயில்களில் கட்டணத்துடன் கூடிய பாதுகாப்புப் பெட்டக (Locker) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரிய கோயில்களில் ஒரே நேரத்தில் சுமார் 20,000 செல்போன்கள் வரை பாதுகாப்பாக வைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை அமலாகும் முக்கிய கோயில்கள்

சென்னை வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், திருத்தணி முருகன் கோயில், காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், திருவள்ளூர் வீரராகவர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தென் மாவட்டங்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், நெல்லையப்பர் கோயில், தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில், குற்றாலநாதர் கோயில், பண்பொழி திருமலை குமாரசாமி கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர பழனி, திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை, சமயபுரம், ஸ்ரீரங்கம், சுசீந்திரம், மதுரை அழகர் கோயில், இராமேஸ்வரம் உள்ளிட்ட மொத்தம் 52 முக்கிய கோயில்களில் செல்போன் தடை நடைமுறைக்கு வந்துள்ளது.

பக்தர்களுக்கு அறிவுறுத்தல்

திருவிழா காலங்கள் மற்றும் முக்கியமான நாட்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை விடுதிகள் அல்லது வாகனங்களிலேயே வைத்துவிட்டு கோயிலுக்கு வருவது சிறந்தது என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், செல்போன் தடையை மீறி கோயில்களுக்குள் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டால், அதற்கு பொறுப்பான கோயில் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.