3 கி.மீ. நடந்து செல்லும் மாணவியர்... பாதுகாப்பு கேள்விக்குறி... சமூக நல விடுதி முன்பு பேருந்து நிறுத்தம் அமைக்க கோரி ஆட்சியரிடம் மனு!

3 கி.மீ. நடந்து செல்லும் மாணவியர்... பாதுகாப்பு கேள்விக்குறி... சமூக நல விடுதி முன்பு பேருந்து நிறுத்தம் அமைக்க கோரி ஆட்சியரிடம் மனு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா கழுகுமலை – கோவில்பட்டி சாலையில் உள்ள குமாரபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் சமூக நலத்துறை மாணவியர் விடுதி முன்பு பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கயத்தாறு ஒன்றிய செயலாளர் சாலமன், மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கழுகுமலையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவியர் தங்குவதற்காக குமாரபுரம் பகுதியில் சமூக நலத்துறை மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதி, கழுகுமலை நகரிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் கோவில்பட்டி பிரதான சாலையில் அமைந்துள்ளது.

ஆனால், விடுதி முன்பாக எந்தவிதமான பேருந்து நிறுத்த வசதியும் இல்லாததால், பள்ளி முடிந்து வரும் மாணவியர் தினமும் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்தே விடுதிக்கு செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், விடுதியைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் நடமாட்டம் குறைவான பகுதியாக இருப்பதால், மாணவியர் பாதுகாப்பு குறித்த அச்சமும் பெற்றோர் மத்தியில் நிலவி வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மாணவியர் தனியாக நடந்து செல்ல வேண்டிய சூழல் பாதுகாப்பற்றதாக உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாணவியரின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கழுகுமலையிலிருந்து கோவில்பட்டி செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் சமூக நல விடுதி முன்பாக நின்று செல்ல மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்துத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை மனுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கயத்தாறு ஒன்றிய செயலாளர் சாலமன் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கினார்.

மாணவியரின் பாதுகாப்பு மற்றும் கல்வி நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.