அலுவல் பணியில் சென்ற வங்கி மேலாளர், உதவி மேலாளர் மீது தாக்குதல்: திருச்செந்தூரில் பரபரப்பு – குற்றவாளிகளை கைது செய்ய வங்கி ஊழியர், அதிகாரிகள் சங்கங்கள் வலியுறுத்தல்.!

அலுவல் பணியில் சென்ற வங்கி மேலாளர், உதவி மேலாளர் மீது தாக்குதல்: திருச்செந்தூரில் பரபரப்பு – குற்றவாளிகளை கைது செய்ய வங்கி ஊழியர், அதிகாரிகள் சங்கங்கள் வலியுறுத்தல்.!

தமிழ்நாடு கிராம வங்கி ஆறுமுகநேரி கிளையின் கிளை மேலாளர் ஜே. பிரவீன் குமார் மற்றும் உதவி மேலாளர் சந்தோஷ் பிரபு ஆகியோர் அலுவல் பணிக்காக சென்றபோது தாக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தை தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர் சங்கம் (TNGBWU) மற்றும் தமிழ்நாடு கிராம வங்கி அதிகாரிகள் சங்கம் (TNGBOA) வன்மையாகக் கண்டித்துள்ளன.

சங்கங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி மதியம், தமிழ்நாடு கிராம வங்கி ஆறுமுகநேரி கிளை மேலாளர் ஜே. பிரவீன் குமார் மற்றும் உதவி மேலாளர் சந்தோஷ் பிரபு ஆகியோர், வங்கியின் அலுவல் பணியின் ஒரு பகுதியாக வீரபாண்டியன்பட்டினம் பிரசாத் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் காமாட்சி அம்மன் சுயஉதவிக்குழு கடன் புதுப்பித்தல் தொடர்பான ஆவணங்களில் உறுப்பினர்களிடம் கையொப்பம் பெறச் சென்றிருந்தனர்.

அப்போது, குழு உறுப்பினரான கனி என்பவரின் வீட்டிற்குச் சென்று, அவரை சந்திக்க முயன்றதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த அவரது மகளிடம் தாங்கள் தமிழ்நாடு கிராம வங்கியின் கிளை மேலாளர் மற்றும் உதவி மேலாளர் என்றும், கடன் புதுப்பிப்பு ஆவணங்களில் கையொப்பம் பெற வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அவரது மகள் தனது சகோதரர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும், சிறிது நேரத்தில் அங்கு வந்த இருவரும், "எங்கள் அம்மா வாங்கிய கடனுக்காக எங்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்?" என்று கூறி, இரு அதிகாரிகளையும் ஆபாசமான மற்றும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, கிளை மேலாளர் ஜே. பிரவீன் குமாரை  தாக்கியதாகவும், இதனால்  காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், உதவி மேலாளர் சந்தோஷ் பிரபுவையும் தாக்கி,  காயம் ஏற்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின், அப்பகுதியில் இருந்த முத்துக்குமார் என்பவரும், அவருடன் இருந்த சிலரும் சம்பவ இடத்திற்கு வந்து, இரு அதிகாரிகளையும் தாக்கியதாகவும், அலுவல் பணியை மேற்கொள்ளவிடாமல் தடுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தாக்குதலில் இருந்து தப்பி வெளியேற முயன்றபோது, "மீண்டும் இந்தப் பகுதிக்கு வந்தால் உயிருடன் விடமாட்டோம், கொன்று விடுவோம்" என்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதனால் உயிருக்கு அச்சம் ஏற்பட்ட நிலையில் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்று திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கிளை மேலாளர் ஜே. பிரவீன் குமார், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தங்களைத் தாக்கிய கனி என்பவரின் இரு மகன்கள், முத்துக்குமார் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட மற்ற நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து, உடனடியாக கைது செய்து, சம்பந்தப்பட்ட  சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களது உயிர் மற்றும் உடைமைகளுக்கு காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர் சங்கம் (TNGBWU) மற்றும் தமிழ்நாடு கிராம வங்கி அதிகாரிகள் சங்கம் (TNGBOA) நிர்வாகிகள் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த இரு அதிகாரிகளையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும், மருத்துவ சிகிச்சை, காவல்துறையில் புகார் அளித்தல், FIR பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளையும் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், வங்கி நிர்வாகமும் இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பும் நிர்வாக ஆதரவும் வழங்க வேண்டும் என இரு சங்கங்களும் வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து சங்கங்களின் பொதுச் செயலாளர்கள் Y. அஸ்வத் (TNGBWU) மற்றும் S. அறிவுடைநம்பி (TNGBOA) வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது இரு அதிகாரிகள் மீதான தாக்குதல் மட்டுமல்ல; பொது வங்கி ஊழியர்கள் தங்களது அலுவல் பணியைச் செய்யவிடாமல் வன்முறையின் மூலம் தடுத்த மிகக் கடுமையான குற்றமாகும். குற்றவாளிகள் மீது உடனடியாக FIR பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அலுவல் பணியைத் தடுத்தது, தாக்குதல் நடத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட அனைத்து குற்றங்களுக்கும் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவல் பணியில் ஈடுபடும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வங்கி நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், "நமது உறுப்பினர் ஒருவர் மீது நடத்தப்படும் தாக்குதல் என்பது ஒட்டுமொத்த வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான தாக்குதலாகவே கருதுகிறோம். பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுடன் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர் சங்கமும், தமிழ்நாடு கிராம வங்கி அதிகாரிகள் சங்கமும் இறுதிவரை உறுதியாக நிற்கும். குற்றவாளிகள் மீது முன்மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வரை சட்டப்பூர்வ மற்றும் ஜனநாயக வழியில் எங்களது போராட்டம் தொடரும்" என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.