அமைச்சர் நிர்மல் குமாருக்கு தூத்துக்குடி வரலாறே தெரியாது!" – மேயர் ஜெகன் பெரியசாமி கடும் தாக்கு

அமைச்சர் நிர்மல் குமாருக்கு தூத்துக்குடி வரலாறே தெரியாது!" – மேயர் ஜெகன் பெரியசாமி கடும் தாக்கு

தூத்துக்குடி மாநகராட்சி மேயரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி, அமைச்சர் நிர்மல் குமார் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், வெள்ளப் பாதிப்பின் போது மேயர் மக்களுக்கு உதவாமல் சேலம் மாநாட்டிற்குச் சென்றதாக கூறியது முற்றிலும் தவறான தகவல் என தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சியின் தெருக்கள் மற்றும் குறுக்குச் சந்துகள் பற்றியே தெரியாத அமைச்சர், மாநகராட்சி குறித்து பேசத் தகுதியில்லை என்றும் ஜெகன் பெரியசாமி கூறியுள்ளார்.

2023-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு பல நாட்கள் தூத்துக்குடியில் முகாமிட்டு பணிகளை ஒருங்கிணைத்ததாகவும், அமைச்சர்கள் மற்றும் எம்.பி. கனிமொழி தலைமையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றதால் குறுகிய காலத்தில் இயல்பு நிலை திரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திராவிட மாடல் ஆட்சியில் தூத்துக்குடி மாநகராட்சியில் 4,000 சாலைகள், 53 பூங்காக்கள், 3 மகளிர் பூங்காக்கள், 7 குளங்கள் புனரமைப்பு, படிப்பகங்கள், மேம்படுத்தப்பட்ட பள்ளிகள் மற்றும் 24 மணி நேர குடிநீர் வசதி போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிர்மல் குமார் முதலில் மின்சாரத் துறையில் உள்ள குறைபாடுகளையும், தூத்துக்குடி அனல்மின் நிலைய மின் உற்பத்தி பிரச்சினையையும், தெர்மல் நகர் பகுதியில் கழிவுச் சாம்பல் கடலில் கலப்பதால் ஏற்படும் பாதிப்புகளையும் சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக, தனது தந்தைக்கு "முரட்டு பக்தன்" என்ற பட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழங்கிய அரசியல் பின்னணியே அமைச்சர் நிர்மல் குமாருக்கு தெரியாது என்றும், பல கட்சிகளுக்குத் தாவி வந்தவருக்கு அரசியல் வரலாறு குறித்து பேசத் தகுதி இல்லை என்றும் மேயர் ஜெகன் பெரியசாமி தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார்.