பிளஸ் 2 முடித்தவர்களுக்கு அடிப்படை மருத்துவம் சார்ந்த பயிற்சிகள்: ஆட்சியர் தகவல்!
தாட்கோ மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, வேலைவாய்ப்புடன் கூடிய அடிப்படை மருத்துவம் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பாக என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக(தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு படித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு அடிப்படை ஆயுர்வேத மசாஜ் பயிற்சி, அடிப்படை டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி, அடிப்படை அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி, அடிப்படை அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி, அடிப்படை மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி,
அடிப்படை செவிலியர் பயிற்சி, அடிப்படை பஞ்சகர்மா தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி, அடிப்படை மூத்த பராமரிப்பு பயிற்சி, அடிப்படை எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி, அடிப்படை யோகா மற்றும் ஆரோக்கிய பயிற்சி என பல்வேறு மருத்துவம் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை முன்னணி பயிற்சி நிறுவனங்கள் முலம் வழங்கி வேலைவாய்ப்பு பெற்று தர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த 18 முதல் 35 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.12,000/- முதல் ரூ.20,000/- வரை பெறலாம். பின்னர் திறமைக்கு தகுந்தவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம்.
இப்பயிற்சியினை பெற தூத்துக்குடிமாவட்டத்தை சார்ந்த மாணக்கர்கள் (www.tahdco.com) என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.