தூத்துக்குடியில் பா.ஜ.க டிஜிட்டல் போர்டுகள் அகற்றம் : மாநகராட்சி நடவடிக்கை..!
தூத்துக்குடியில் அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்ட போர்டுகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தியதைக் கண்டித்து பா.ஜ.க., வினர் போராட்டத்தால் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்ட போர்டுகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தியதைக் கண்டித்து பா.ஜ.க., வினர் போராட்டத்தால் ஈடுபட்டனர்.
பா.ஜ.கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை தூத்துக்குடிக்கு இன்று காலை விமானம் மூலம் வருகிறார். பின்னர் அவர், தேவர், அம்பேத்கர், குரூஸ்பர்னாந்து, வ.உ.சிதம்பரனார், காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து அபிராமி மஹாலில் நடைபெறும் கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார். அண்ணாமலை வருகையையொட்டி பா.ஜ.க., வினர் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் டிஜிட்டல் போர்டுகள் வைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் மாநகராட்சி ஊழியர்கள் அனுமதியின்றி அமைக்கப்பட்டதாக கூறி பா.ஜ.க.,வினர் டிஜிட்டல் போர்டுகளை முழுவதும் அப்புறப்படுத்தியுள்ளனர். இதனையறிந்த பா.ஜ.க., வினர் மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, மாவட்ட பொதுச்செயலாளர் சத்தியசீலன், மாவட்ட துணைத்தலைவர் தங்கம் ஆகியோர் தென்பாகம் காவல் நிலையம் அருகே மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியல் செய்ய முயற்சி செய்தனர்.
தகவலறிந்த தூத்துக்குடி டி.எஸ்.பி. சத்தியராஜ் மற்றும் தென்பாகம் சப்.இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பா.ஜ.க., வினரை சமாதனம் செய்தனர். பின்னர், மாநகராட்சி அதிகாரிகள் டிஜிட்டல் பேனர்களை மீண்டும் வழங்கினர். இதனையடுத்து மீண்டும் அதே இடங்களில் பா.ஜ.க.,வினர் பேனர்களை வைத்தனர். தூத்துக்குடியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.