சாலையில் கவிழ்ந்த ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து: டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்!!
திருச்செந்தூர் அருகே சாலையில் கவிழ்ந்த ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய கோர விபத்தில் டிரைவர் உள்ளிட்ட 2பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே வன்னிமாநகரத்தை சேர்ந்த தங்கராஜ் மகன் ஜெயசிங் (38) ஆட்டோ டிரைவர். இவர் வன்னி மாநகரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். காலை சுமார் 6 மணியளவில் குமாரபுரத்தில் சாலையின் குறுக்கே எருமைமாடு ஒன்று வந்ததால் ஆட்டோவை நிறுத்த டிரைவர் முயற்சித்துள்ளார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதில் ஜெயசிங் காயமடைந்தார்.
இதை பார்த்த குரும்பூர் அருகே பணிக்கநாடார் குடியிருப்பை சேர்ந்த பாலகணேஷ் (37) என்பவர் ஓடிச்சென்று ஜெயசிங்கை மீட்டும், ஆட்டோவை தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது நெல்லையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த அரசு பஸ் ஆட்டோவின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜெயசிங், பாலகணேஷ் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ஆடடோ சுக்குநூறாக நொறுங்கி பலத்த சேதம் அடைந்தது.
சாலை முழுவதும் கண்ணாடி உடைந்து சிதறியது. அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று இருவரையும் படுகாயங்களுடன் மீட்டனர். இதில் ஜெயசிங் திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியிலும், பாலகணேஷ் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோரவிபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடரும் விபத்துகள்
திருச்செந்தூர்-நெல்லை சாலையில் குமாரபுரம் முதல் ராணிமகாராஜபுரம் வரை எருமைமாடுகள், குதிரைகள், பசுமாடுகள் கன்றுகளுடன் அதிகாலை முதல் நள்ளிரவிலும் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகின்றன. இதனால் அடிக்கடி இந்த சாலையில் மாடுகள் மீது கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துகள் நடந்து வருகின்றன. குறிப்பாக சாலையில் நடமாடும் மாடுகள் அவ்வப்போது ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக் கொண்டு திடீெரன்று மையப்பகுதிக்கு வருவதால் வாகன விபத்துகள் நடந்து வருகின்றன.
ஏற்கனவே மாடுகள் மீது வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்து இருப்பதுடன், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், இந்த சாலையில் இரவு, பகல் எந்நேரமும் பீதியுடனே டிரைவர்கள் வாகனங்களை ஓட்டிச் செல்லும் பரிதாப நிலை இருக்கிறது. இனியும் இச்சாலையில் விபத்துகள் ஏற்பட்டு தேவையற்ற உயிர்ப்பலிகள் நிகழாமல் தடுக்க, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மாடுகள், குதிரைகள் நடமாட்டத்தை அடியோடு தடுக்க உறுதியான நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.