தொண்டு நிறுவனம் பணமோசடி: ஆட்சியர் அலுவலகத்தில் ஆசிரியைகள் முற்றுகை!
தூத்துக்குடியில் தொண்டு நிறுவனம் பண மோசடி செய்து விட்டதாக பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் தொண்டு நிறுவனம் பண மோசடி செய்து விட்டதாக பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் இருந்து ஆதவா தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொண்டு நிறுவனத்தின் தலைவராக பாலகுமரேசன் என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1500 பெண் ஆசிரியர்களை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக பணி அமர்த்தி அவர்களுக்கு மாதம் 15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் எனக் கூறி ஒவ்வொரு ஆசிரியர்களிடம் மூன்று லட்ச ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளார்.
இந்நிலையில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கடந்த ஏழு மாதங்களாக சம்பளம் வழங்காமல் ஏமாற்றி வந்ததுடன் தலைமறைவாகி உள்ளார். ஆசிரியர்களிடம் அரசு பள்ளியில் ஆசிரியர் பணி என்ற பெயரில் மோசடி செய்து சுமார் பல கோடி ரூபாய் மோசடி செய்த ஆதவா தொண்டு நிறுவன தலைவர் பால குமரேசனை கைது செய்து தங்களுக்கு உடனடியாக தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் பள்ளி கல்வித்துறை மாவட்ட நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதை தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து சென்றனர். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்த பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கண்ணீர் மல்க தங்களது பணத்தை மீட்டு தர கோரிக்கை விடுத்தனர். இதை எடுத்து ஆதவா தொண்டு நிறுவன உரிமையாளர் பாலகுமரேசனை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.