மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.17 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!!
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் ரூ.17 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (28.10.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 365 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 14 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கில் அரசு பணியாளர்களுக்காக நடைபெற்ற மருத்து முகாமினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அதனைத்தொடர்ந்து ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஊழலுக்கு எதிரான உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், அவர்களிடம் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை காண்பித்து வாழ்த்துப்பெற்றனர். மேலும், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு விசைப்படகு உபயோகப்படுத்த முடியாத நிலைக்கு போன வகைக்கு இழப்பீடாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 1 பயனாளிக்கு ரூ.6 இலட்சத்திற்கான காசோலையினையும், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு விபத்துகளில் மரணமடைந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 இலட்சம் வீதம் 11 நபர்களுக்கு ரூ.11 இலட்சத்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன் என்பவர் ஐரோப்பிய கண்டத்தின் மிக உயர்ந்த மலையான காகாசஸ் மலையை ஏறி சாதனை புரிந்துள்ளதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ்வரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், மாவட்ட விளையாட்டு நல அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.