Vision 2030 விழாவில் பரபரப்பு – நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே வெளியேறிய விளாத்திகுளம் MLA

Vision 2030 விழாவில் பரபரப்பு –  நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே வெளியேறிய விளாத்திகுளம் MLA

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற “உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டத்தின் நிறைவு விழா – “கனவுகள் மெய்ப்படும்” கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியதையொட்டி, அதனுடன் தொடர்புடைய நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகராட்சியின் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் (IAS) தலைமையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கான Vision 2030 தொலைநோக்கு திட்ட புத்தகத்தை வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் தூத்துக்குடி மேயர் பெ.ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் சிப்ரியங்கா (IAS), மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர் இளையராஜா (I.V.P) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ஆனால் நிகழ்ச்சி தொடக்கத்தில் மேடையில் அமர்ந்திருந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், முதலமைச்சர் நிகழ்ச்சி காணொளி ஒளிபரப்பு தொடங்கிய சில நிமிடங்களிலேயே திடீரென மேடையை விட்டு எழுந்து வெளியேறினார்.

மேலும் அவர் நேரடியாக தனது காரில் ஏறி விளாத்திகுளம் நோக்கி புறப்பட்டுச் சென்றார்.

இந்த சம்பவம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடையே ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

ஒரு முக்கிய அரசு நிகழ்ச்சியில், அதுவும் முதலமைச்சர் தொடர்புடைய நிகழ்ச்சி ஒளிபரப்பின் போது ஒரு சட்டமன்ற உறுப்பினர் திடீரென மேடையை விட்டு வெளியேறியது குறித்து பல்வேறு அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.

எனினும், அவர் வெளியேறியதற்கான சரியான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இதனால் “அவசர வேலை காரணமா? அல்லது வேறு ஏதேனும் அரசியல் பின்னணி உள்ளதா?” என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.