தூத்துக்குடி கிரேட் காட்டன் சாலையில் உள்ள நகைக் கடைக்காரர் வாடிக்கையாளருக்கு ரூ.24 ஆயிரம் வழங்க நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு..!
தூத்துக்குடியில் தங்க நகைக்கு அதிக பணம் பெற்ற வழக்கில், வாடிக்கையாளருக்கு ரூ.24 ஆயிரத்து 545 வழங்க நகைக் கடைக்காரருக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சாா்ந்த ரங்கநாத கண்ணன் என்பவா் கிரேட் காட்டன் சாலையில் உள்ள ஒரு நகைக் கடையில் தங்கச் சங்கிலி வாங்கியுள்ளாா். அவா், வீட்டிற்கு வந்து கணக்கு போட்டு பாா்த்ததில் நகைக் கடைக்காரா் அதிகமான பணம் பெற்றுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து அவா் கடையில் சென்று கேட்டதற்கு, கடைக்காரா் நகையின் அளவு மற்றும் விலை ஆகியவை அன்றைய தேதியின்படி சரியாக உள்ளது என கூறிவிட்டாராம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவா் தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் திருநீல பிரசாத், உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் தங்க நகை விற்பனையில் கூடுதலாக பெறப்பட்ட ரூ.4ஆயிரத்து 545, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுத் தொகை ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.24 ஆயிரத்து 545 வாடிக்கையாளருக்கு தங்க நகைக்கடைக்காரா் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.