அமலாக்கத்துறை ஆதாரங்களில் முன்னுக்குப் பின் முரண்.. பாயிண்டை பிடித்த செந்தில் பாலாஜி தரப்பு!

அமலாக்கத்துறை ஆதாரங்களில் முன்னுக்குப் பின் முரண்.. பாயிண்டை பிடித்த செந்தில் பாலாஜி தரப்பு!

சென்னை: செந்தில் பாலாஜி வீட்டில் கைப்பற்றியதாக கூறிய ஆதாரங்களை, தற்போது மாநகர போக்குவரத்து கழக அலுவலகத்தில் இருந்து பெற்றதாகத் தெரிவிக்கிறது அமலாக்கத்துறை என்றும், அமலாக்கத்துறையின் வாதங்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன என்றும் செந்தில் பாலாஜி தரப்பு பரபர பதில் வாதங்களை அடுக்கியுள்ளது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே உடல் நலக் காரணங்களைச் சுட்டிக்காட்டி ஜாமீன் பெற உச்ச நீதிமன்றம் வரை சென்று, அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜியின் 2வது ஜாமீன் மனு: 

செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் பரபரப்பான‌ வாதங்களை வைத்திருந்தார். அதற்கு அடுத்த நாள் அமலாக்கத்துறை வாதங்களை வைத்தது.

முன்னுக்குப் பின் முரண் - ஆர்யமா சுந்தரம் வாதம்: 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, அமலாக்கத்துறை வாதத்துக்கு பதிலளித்து செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத் துறை முன்வைத்த ஆதாரங்களில் முன்னுக்கு பின் முரண்பாடுகள் உள்ளன. செந்தில் பாலாஜி வீட்டில் கைப்பற்றியதாக கூறிய ஆதாரங்களை, தற்போது மாநகர போக்குவரத்து கழக அலுவலகத்தில் இருந்து பெற்றதாகத் தெரிவிக்கின்றனர் என வாதிட்டார்.

வேலை வாங்கித் தருவதாக 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக அமலாக்கத் துறை கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவித்த மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், புலன் விசாரணை முடிந்து விட்டதாக அமலாக்கத் துறையினரே கூறுகின்றனர் என வாதிட்டார்.

சந்தேகங்கள் உள்ளன: அமலாக்கத் துறையின் ஆதாரங்கள் சந்தேகத்துக்கு இடமானவை. செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. நீண்டகாலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயார் என ஆர்யமா சுந்தரம் குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதங்களை வைத்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.