தூத்துக்குடி துறைமுக ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் வலியுறுத்தி தர்ணா போராட்டம்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் சார்பில் வ.உ.சி. போர்ட் பென்சனர்ஸ் அசோசியேஷன் இன்று துறைமுக அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வூதியர்களுக்கு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு பென்சனர்ஸ் அசோசியேஷன் தலைவர் டாக்டர் பி. சிவனாகரன் தலைமை வகித்தார். செயலாளர் சிந்தாதுரை, பொருளாளர் பாலசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் லேபர் டிரஸ்டிகள் ராயன், ராஜேந்திரன், கோபால், சுப்பிரமணியன், ரசல் பாலகிருஷ்ணன் மற்றும் துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் பொதுச் செயலாளர் காசி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக அசோசியேஷன் நிர்வாகி ஈஸ்வரமூர்த்தி நன்றி கூறினார்.

போராட்டத்தில் பேசிய ஓய்வூதியர்கள், 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தங்களுக்கு வழங்க வேண்டிய அரியர்ஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மேலும் 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஊக்கத்தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும்,

அதேபோல், சென்னை துறைமுகத்தில் வழங்கப்படுவது போல தூத்துக்குடி துறைமுக ஓய்வூதியர்களுக்கும் “ட்ராப்பின் பென்ஷன்” வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஓய்வூதியர்களிடமிருந்து கம்யூடேஷன் பிடித்தம் 12 ஆண்டுகளாக குறைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் துறைமுகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பதவி உயர்வுகள் வழங்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியர்களுக்கான மருத்துவ வசதிகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த போராட்டத்தில் ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.