தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் தூர் வாரும் பணி : மண் வளங்களை வீணாக்காமல் நிலப்பரப்பாக மாற்றம்!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஆழப்படுத்தும் பணிகளுக்காக தூர்வாரப்பட்ட மண் வளங்களை வீணாக்காமல் அதனை பயன்படுத்தி நிலையான நிலப்பரப்பாக மாற்றப்பட்டுள்ளது....
இதுகுறித்து துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் வடக்குசரக்கு தளம் - 3-ல் 14.20 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட பெரிய சரக்கு கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக மேற்கொள்ளப்பட்ட ஆழப்படுத்தும் பணியானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. மேலும் துறைமுகத்தின் உள்துறைமுக பகுதியில் கப்பல் வரும் சுற்றுவட்ட பாதையினை 488 மீட்டரிலிருந்து 550 மீட்டராக ஆழப்படுத்தி விரிவுபடுத்தி உள்ளது.
இந்த ஆழப்படுத்தும் பணி 05.04.2025 அன்று துவக்கப்பட்டு 16.05.2025 அன்று முடிக்கப்பட்டது. இதன் மூலம், பெரிய வகை சரக்கு கப்பல் மற்றும் சரக்குபெட்டக கப்பல்களை கையாளும் வசதியை துறைமுகம் பெற்று சரக்கு கையாளும் திறன் மேம்பாட்டிற்காக மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது.
வ.உ.சிதம்பரனார் துறைமுகம், இந்த ஆழப்படுத்தும் பணியின் மூலம் தூர் வாரப்பட்ட மண் வளங்களை வீPணாகவிடாமல் அவைகளைப் பயன்படுத்தி துறைமுகத்தின் நிலக்கரி சேமிப்பு கிடங்கின் அருகிலும், காற்றாலை இறகுகளைச் சேமித்து வைக்கும் கிடங்கின் கிழக்கிலும் உள்ள நீர்ப்பரப்பை நிலப்பரப்பாக மாற்றியுள்ளது.
சுண்ணாம்பு கலந்த மணல் பொருட்கள் மற்றும் கால்காரனைட் (ஊயடஉயசநnவைந) ஆகியவை அடங்கிய 8,00,000 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட இந்த தூர் வாரப்பட்ட மண் வளங்களை பயன்படுத்தி சரக்குகளைத் திறம்பட சேமிக்கப் பயன்படும் 11.5 ஹெக்டேர் புதிய நிலப்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, ஆழப்படுத்தும் பணியின் மூலம் தூர் வாரப்பட்ட மண் வளங்களை கழிவுப் பொருட்களாகவே கருதப்பட்டு வருகின்றது. ஆனால் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ‘கழிவிலிருந்து செல்வம்’ என்னும் புதிய அணுகுமுறையைப் பயன்படுத்தி, தூர் வாரப்பட்ட மண் வளங்களைக் கொண்டு நிலப்பரப்புகளை உருவாக்கி, அந்நிலப்பரப்புகளை சரக்குத் தளங்களாகவும், சேமிப்புக் கிடங்குகளாகவும் அமைத்துள்ளது.
இந்த நிலைத்தன்மைக்கான முயற்சி, கடல்சார் உள்கட்டமைப்பின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், சாதாரணமாக கழிவாக கருதப்படும் தூர் வாரப்பட்ட மண் வளத்தினை மறுசுழற்சி செய்து பயனுள்ளதாய் மாற்றியதின் மூலம் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது.
தற்போது முடிவடைந்துள்ள ஆழப்படுத்தும் பணிக்கு முன்பாக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 1999, 2010, 2015 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் பல ஆழப்படுத்தும் பணித்திட்டங்கள் சரக்குத் தளங்களிலும், கப்பல்கள் துறைமுகத்திற்குள் வரும் நுழைவு வாயிலிகளிலும், உள்துறைமுக பகுதியில் கப்பல் வரும் சுற்றுவட்ட பாதையிலும் செயல்படுத்தியுள்ளது.
இந்த திட்டங்களின் மூலம் இதுவரை மொத்தமாக, சுமார் 146 ஹெக்டேர் நிலப்பரப்பை துறைமுகம் மீட்டெடுத்து பயன்படுத்தியுள்ளது. அவ்வாறு மீட்கப்பட்ட முக்கியமான பகுதிகளில், தூத்துக்குடி சர்வதேச சரக்குபெட்டக முனையம் மற்றும் தக்ஷன் பாரத் கேட்வே சரக்குபெட்டக முனையம் ஆகியவை தளங்களும் அடங்கும்.
இவை இரண்டும் இணைந்து 20 ஹெக்டேர் நிலப்பரப்பை சரக்கு சேமிப்பு பகுதியாக கொண்டுள்ளது. மேலும், மீட்கப்பட்ட பகுதிகளில், 57 ஹெக்டேர் நிலப்பரப்பையுடைய நிலக்கரி சேமிப்புக் கிடங்கு, 13 ஹெக்டேர் நிலப்பரப்பைக் கொண்ட காற்றாலை இறகுகளைச் சேமித்து வைக்கும் கிடங்கு, வரவிருக்கும் பல்நோக்கு சரக்குத் தளம்-10-அமைப்பதற்கான 8.6 ஹெக்டேர் நிலப்பரப்பு மற்றும் வரவிருக்கும் பசுமை ஹைட்ரஜன் / அமோனியா சேமிப்பு நிலையம் அமைப்பதற்காக 17 ஹெக்டேர் நிலப்பரப்பு ஆகியனவும் அடங்கும்.
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித் தனது செய்தியில், ஆழப்படுத்தும் பணியில் தூர் வாரப்பட்ட மண் வளங்களைத் திட்டமிட்டு பயன்படுத்தியதின் மூலம், சரக்கு தளங்களையும், சேமிப்புக் கிடங்குகளையும் அமைப்பதற்கான பயனுள்ள நிலத்தை உருவாக்க முடிந்ததாக கூறினார்.
மேலும் அவர், இந்த அணுகுமுறை சுற்றுச் சூழல் பாதிப்பைக் குறைத்து சுற்றுச் சூழல் பாதுகாப்புக்குத் துணை செய்வதாகவும், பாரம்பரிய கட்டுமானப் பொருட்களைச் சார்ந்திருத்தளை தவிர்த்து ஆழப்படுத்தும் போது கிடைக்க பெற்ற மண் வளங்களை பயன்படுத்துவதன் மூலம் சராசரியாக 1 கியூபிக் மீட்டர் நிலத்தை உருவாக்குவதற்கு ரூபாய் 600 மிச்சப்படுத்திள்ளது மற்றும் இதனுடன், சுற்றுச் சூழல் தரநிலைகளுக்கு ஏற்ப ஒழுங்குமுறை அனுமதிகளைப் பின்பற்றுவதற்கும் உறுதுணை செய்கிறது என்றும் கூறினார்.