பைக்குகள் மோதிய விபத்தில் இன்ஜினியர் பலி; 2 பேர் படுகாயம்!

கயத்தாறு அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இன்ஜினியர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நெல்லை மாவட்டம் மானூர் யூனியைச் சேர்ந்த வடக்கு செழியநல்லூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டி. விவசாயி மகன் ராஜூ (27). சிவில் இன்ஜினியர். இவர் கேரளாவில் வேலை பார்த்து வந்தார். கடந்த சிலநாட்களுக்கு முன்பு ஊரில் நடைபெற்ற கோவில் கொடை விழாவிற்காக அவர் வந்திருந்தார். இந்நிலையில் தனது நண்பர் தென்னம்பட்டியை சேர்ந்த ராஜபாண்டி மகன் கருப்பசாமியை பார்க்க சென்றார்.
பின்னர், அங்கு இருந்து ஊருக்கு கயத்தாறை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை கருப்பசாமி ஓட்டினார். அப்போது எதிரே அகிலாண்டபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் பால்துரை கயத்தாறில் இருந்து எப்போதும்வென்றானுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கயத்தாறு அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகின.
இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் 3பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜீவ் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.