தமிழ்நாடு அரசை கண்டித்து தூத்துக்குடியில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்..!

தமிழ்நாடு அரசை கண்டித்து  தூத்துக்குடியில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்..!

தூத்துக்குடியில் உர விலையை கட்டுப்படுத்த வேண்டும், விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ரா.ராகவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் பா.புவிராஜ் மற்றும் லெனின் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர்கள், தொடர்ந்து உயர்ந்து வரும் உர விலை மற்றும் விவசாய உற்பத்தி செலவுகள் காரணமாக விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரிவித்தனர். மேலும், பருவமழை பாதிப்பு, பயிர் சேதம் மற்றும் கடன் சுமை காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

விவசாயிகளை பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடியாக உர விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும், விவசாயிகளை ஏமாற்றாமல் அனைத்து பயிர் கடன்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

புதிதாக பதவியேற்றுள்ள விஜய் அரசு உடனடியாக விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக ரத்து செய்து நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் நம்பிராஜன், பிச்சையா, கணேசமூர்த்தி, முரளிதரன், பி.சீனிவாசன், மணி, ஜி.ராமசுப்பு, செல்வராஜ், அசோக் குமார், ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.