தூத்துக்குடியில் மீன் விலை உச்சம்..! சீலா கிலோ ₹1600; மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதல்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி இனப்பெருக்கத்திற்கான தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகுகள் இன்னும் கடலுக்கு செல்லாத நிலையில், திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைந்ததால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் அமலில் உள்ள 61 நாள் மீன்பிடி தடைக்காலம் காரணமாக விசைப்படகுகள் வருகிற ஜூன் 14-ஆம் தேதி முதல் மீண்டும் கடலுக்கு செல்ல உள்ளன. இதனால் தற்போது நாட்டுப் படகுகள் மற்றும் பைபர் படகுகள் மட்டுமே மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் மற்றும் பைபர் படகுகள் இன்று கரை திரும்பின. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மீன்கள் கிடைக்காததால் வரத்து குறைவாக இருந்தது.

மறுபுறம், வார இறுதி நாளான சனிக்கிழமையையொட்டி பொதுமக்கள் மற்றும் மீன் வியாபாரிகள் அதிக அளவில் மீன்களை வாங்க குவிந்தனர். இதன் காரணமாக மீன்களின் விலை திடீரென உயர்ந்து காணப்பட்டது.

வஞ்சிரம் என அழைக்கப்படும் சீலா மீன் ஒரு கிலோ ரூ.1600 வரை விற்பனையானது. விளை மீன் கிலோ ரூ.800, ஊளி மீன் கிலோ ரூ.750, பாறை மீன் கிலோ ரூ.550, நண்டு கிலோ ரூ.800, கேரை மற்றும் சூறை ரக மீன்கள் கிலோ ரூ.400 வரை விற்பனையானது. மேலும், பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்கும் சாலை மீன் ஒரு கூடை ரூ.2000 வரை விற்பனையாகி விலை உச்சத்தை எட்டியது.

மீன்களின் வரத்து குறைவாக இருந்தபோதிலும், கிடைத்த மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தடைக்காலம் முடிந்து விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்லத் தொடங்கினால் மீன்களின் வரத்து அதிகரித்து விலை குறைய வாய்ப்பு இருப்பதாக மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.