தந்தை-மகன் கொலை வழக்கு: காவலருக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்!
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் தாமஸ் பிரான்ஸிசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினா். இதைத் தொடா்ந்து, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனா்.
இதையடுத்து, அப்போதைய சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலா் வெயில்முத்து உள்ளிட்ட 9 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனா்.
தற்போது, இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் 9 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் தாமஸ் பிரான்ஸிசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மகள் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று காவலர் தாமஸ் இடைக்கால ஜாமின் கோரியதை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலர் தாமசுக்கு இன்று மாலை 4 மணி முதல் 11-ம் தேதி மாலை 4 மணி வரை 4 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
View this post on Instagram