கோவில்பட்டியில் பைக் மீது டேங்கர் லாரி மோதி சிறுமி உயிரிழப்பு - மூன்று பேர் படுகாயம்

கோவில்பட்டியில் பைக் மீது டேங்கர் லாரி மோதி சிறுமி உயிரிழப்பு - மூன்று பேர் படுகாயம்

கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்த பரமசிவம்‌. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அவரது வீட்டிற்கு டி கல்லுப்பட்டியில் உள்ள அவரது உறவினர் ஜெயபாண்டி என்பவர் மனைவி வெண்ணிலா, அவரது மகள்கள் ஏஞ்சல் ஆராதியா(9), ஆசினியா(7) ஆகியோர் 22ந்தேதி வந்துள்ளனர். இன்று டி.கல்லுப்பட்டிக்கு போவதற்காக பஸ் ஏற்றி விட வழக்கறிஞர் பரமசிவம், மூன்று பேரையும் தனது பைக்கில் பஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். பசுவந்தனை சாலையில் வந்து கொண்டிருக்கும் போது பின்னால் வந்த டேங்கர் லாரி பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் 5ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஏஞ்சல் ஆராதியா(9) டேங்கர் லாரிக்குள் விழுந்து டயர் ஏறி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

வழக்கறிஞர் பரமசிவம், இவரது உறவினர் வெண்ணிலா, 3ம் வகுப்பு படிக்கும் வெண்ணிலாவின் இளைய மகள் ஆசினியா ஆகியோர் படுகாயம் அடைந்தனர் 

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

விபத்து தொடர்பாக டேங்கர் லாரி டிரைவர் சிவந்திபட்டியை சேர்ந்த ஆறுமுகச்சாமி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பசுவந்தனை சாலை பகுதியில் சாலையின் இரு புறமும் ஆக்கிரமிப்புக்கள் அதிகமாக இருப்பது மட்டுமின்றி, சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். எவ்வித நடவடிக்கும் எடுக்கவில்லை என்பதால் இன்றைக்கு டேங்கர் லாரி மோதி சிறுமி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது