தூத்துக்குடி அருகே பெட்ரோல் பங்கில் பயங்கரம்: ஊழியர்களை தாக்கி ₹10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அடித்து நொறுக்கு – சிசிடிவி வீடியோ வைரல்!

தூத்துக்குடி அருகே பெட்ரோல் பங்கில் பயங்கரம்: ஊழியர்களை தாக்கி ₹10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அடித்து நொறுக்கு – சிசிடிவி வீடியோ வைரல்!

தூத்துக்குடி அருகே கீழ அரசடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் புகுந்து ஊழியர்களை தாக்கி, கணினிகள் மற்றும் பெட்ரோல் நிரப்பும் இயந்திரங்களை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின்படி, நேற்று முன்தினம் மாலை ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் அந்த பெட்ரோல் நிலையத்திற்கு வந்து தங்களது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புமாறு கேட்டுள்ளனர்.

அப்போது, அவர்களில் ஒருவர் பெட்ரோல் நிலைய வளாகத்திலேயே பொதுமக்களுக்கு இடையூறாக சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதனை அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியர் தடுத்து கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்களுக்கும் பெட்ரோல் நிலைய ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஊழியர்களை மிரட்டிவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் சில நிமிடங்களில் தங்களது நண்பர்கள் சிலரை திரட்டிக்கொண்டு, அரிவாள், தடி மற்றும் கம்பு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுமார் 10 பேர் கொண்ட கும்பலாக மீண்டும் பெட்ரோல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

பின்னர் கும்பல் பெட்ரோல் நிலையத்திற்குள் புகுந்து அங்கிருந்த அலுவலக கணினிகள், பெட்ரோல் நிரப்பும் இயந்திரங்கள், கண்ணாடி கதவுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அடித்து நொறுக்கியது. மேலும் தடுக்க முயன்ற ஊழியர்களையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் சுமார் ₹10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பெட்ரோல் நிலைய மேலாளர் சவ்ரவ் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மர்மக் கும்பலை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, ஆயுதங்களுடன் வந்த கும்பல் பெட்ரோல் நிலையத்தை சூறையாடும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.