“கூட்டம் வரும்… வாக்கு வருமா?” – விஜய் விவகாரத்தில் சரத்குமார் சூடான பதில்

“கூட்டம் வரும்… வாக்கு வருமா?” – விஜய் விவகாரத்தில் சரத்குமார் சூடான பதில்

தூத்துக்குடி: பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமார், தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து தூத்துக்குடி நகரில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்ற அவர், அங்கு செய்தியாளர்களை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்தார்.

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன் என சரத்குமார் தெளிவுபடுத்தினார். கூட்டணி தொடர்பான அறிவிப்புகளை மாநில தலைவர் அறிவிப்பார் என குறிப்பிட்ட அவர், தன்னுடன் பயணிக்கும் சகோதரர்களுக்கு வாய்ப்பு பெற்றுத் தருவதே தனது நோக்கம் என்றும், கூட்டணி வெற்றிக்காக அயராது உழைப்பேன் என்றும் கூறினார்.

பாஜக ஒரு மதவாத கட்சி என திமுக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருவதாக கூறிய சரத்குமார், சிறுபான்மையினர் நலனுக்காக திமுக என்ன செய்துள்ளது என்பதை அவர்கள் விளக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

காஷ்மீரில் நடந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் நேரில் செல்ல வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அது குறித்து தனக்கு முழுமையான தகவல் இல்லை என்றும், அந்த கேள்வியை நடிகர் விஜயிடம் கேட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

திமுகவிற்கும் நடிகர் விஜய்க்கும் தான் அரசியல் போட்டியா என்ற செய்தியாளர் கேள்விக்கு, விஜய் கூறியவை அவருக்கு எழுதிக் கொடுத்தவை என பதிலளித்தார்.

திமுக எம்எல்ஏ ஒருவர், காங்கிரஸ் கட்சிக்கு பூத் கமிட்டி அமைக்க கூட ஆட்கள் இல்லை என கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, இது திமுக கூட்டணிக்குள் உள்ள பிரச்சனை; அதில் தாம் கருத்து கூற முடியாது என சரத்குமார் தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடாதது தனது தனிப்பட்ட விருப்பம் என்றும், சுயநலமாக சிந்திக்கவில்லை என்றும் கூறிய அவர், தன்னுடன் இணைந்து செயல்படுபவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே தனது விருப்பம் என கூறினார்.

விஜய் அரசியலில் இறங்கியதை தன்னுடன் ஒப்பிடுவது குறித்து பேசிய சரத்குமார், தன்னிடம் 28 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் அனுபவம் இருப்பதாகவும், எம்பி, எம்எல்ஏ ஆகிய பதவிகளில் போட்டியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கூட்டம் கூடுவது இயல்பானது; ஆனால் வாக்களிப்பார்களா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்றார்.

ராதிகா சரத்குமார் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, நானே போட்டியிடவில்லை; அவர் எப்படி போட்டியிடுவார் என பதிலளித்தார்.

இந்த பேட்டி, தூத்துக்குடி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்தி: TutyVision News | தூத்துக்குடி