கேரள, குமரி மீனவர்கள் 86பேரை சிறைபிடித்த தூத்துக்குடி மீனவர்கள்: நடுக்கடலில் மோதல்!!

கேரள, குமரி மீனவர்கள் 86பேரை சிறைபிடித்த தூத்துக்குடி மீனவர்கள்: நடுக்கடலில் மோதல்!!

தூத்துக்குடி கடற்பகுதியில் மீன்பிடித்துக் காெண்டிருந்ததாக கேரள, குமரியைச் சேர்ந்த 86 மீனவர்களையும் அவர்களது 6 விசைப் படகுகளையும் தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி கடற்பகுதியில் கேரள மீனவர்கள் மீன்பிடிப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தூத்துக்குடி மீன்வர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக நேற்று மீனவரகள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கேரளாவைச் சேர்ந்த விசைப்படகுகள் இரவு நேரங்களில் இழுவை வலை தொழில் ஈடுபட்டு வருவதினாலும் மற்றும் மீன்பிடி தடைக்காலத்திலும் மீன் பிடிப்பதாலும் தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக தூத்துக்குடி மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (19.03.2024) இரவு 10.00 மணிக்கு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 11 விசைப்படகுகளில் மீனவர்கள் சுமார் 26 கடல் மைல் தொலைவில் மீன்பிடித் தொழில் செய்து கொண்டிருந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 1 விசைப்படகையும் அதில் இருந்த 13 மீனவர்களையும், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தைச் சேர்ந்த 5 விசைப்படகுகளையும் அதில் இருந்த 73 மீனவர்களையும் என மொத்தம் 6 விசைப்படகுகள் 86 மீனவர்களை சிறைபிடித்து இன்று அதிகாலை சுமார் 5 மணிக்கு தூத்துக்குடி மீன்பிடி துறைமுக இறகு தளத்தில் நிறுத்தி வைத்துள்ளார்கள்.

இதனிடையே மீனவர்கள் இடையே கடலில் ஏற்பட்ட மோதலில் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டினம் பகுதியைச் சேர்ந்த பெனெட்டிக் (54), கெனி ஆகிய 2பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட 6 படகுகளையும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்து விட்டு அதில் உள்ள 86 மீனவர்களையும் துறைமுக விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தில் வைத்துள்ளார்கள். அவர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நடக்கடலில் நடந்த மீன்வர்கள் மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.