MSME அமைச்சர் மதன்ராஜாவை புறக்கணித்த தவெக நிர்வாகிகள்..? தூத்துக்குடியில் பரபரப்பாக அரங்கேறிய அமைச்சரின் முதல் நிகழ்ச்சி

MSME அமைச்சர் மதன்ராஜாவை புறக்கணித்த தவெக நிர்வாகிகள்..? தூத்துக்குடியில் பரபரப்பாக அரங்கேறிய அமைச்சரின் முதல் நிகழ்ச்சி

தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதன்ராஜா, சமீபத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்த அவரின் நிகழ்ச்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் மதன்ராஜா, ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் தூத்துக்குடி 3-ஆம் மைல் பகுதியில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்காக குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் வழியாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார்.

அப்போது, அம்பேத்கர் சிலை அமைந்திருந்த பகுதியின் கேட் பூட்டப்பட்டிருந்ததால், அமைச்சர் சுமார் 10 நிமிடங்கள் வெளியே காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கேட் திறக்கப்பட்ட நிலையில் அமைச்சர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, குரூஸ்பர்னாந்து மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றபோது அங்கு மாலை இல்லாத நிலை ஏற்பட்டதாகவும், பின்னால் வந்த வாகனத்தில் இருந்து மாலை எடுத்து அணிவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள காமராஜர், காந்தி, அண்ணா, குரூஸ்பர்னாந்து மற்றும் வ.உ.சி. சிலைகளுக்கும் அமைச்சர் மாலை அணிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் பேட்டி பெற தயாரான நிலையில், அமைச்சரின் உதவியாளர் “எந்த பேட்டியும் வேண்டாம்” என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, வ.உ.சி மார்க்கெட் அருகே உள்ள காமராஜர் சிலைக்கும், பின்னர் இந்திராகாந்தி சிலைக்கும் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த முழு நிகழ்ச்சியிலும் தூத்துக்குடி தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும், அமைச்சரின் நிகழ்ச்சியை முற்றிலும் புறக்கணித்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மேலும், கட்சியின் கொள்கை தலைவர்களில் ஒருவராக கருதப்படும் பெரியார் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவிக்காததும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

பின்னர் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அமைச்சர் மதன்ராஜாவை, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மகாஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலர் குருசந்திரன், கோட்டாட்சியர் பிரபு, தாசில்தார் திருமணிஸ்டாலின் உள்ளிட்ட அதிகாரிகள் அரசு நடைமுறையின்படி பூங்கொத்து மற்றும் புத்தகங்கள் வழங்கி வரவேற்றனர்.

அமைச்சரின் முதல் மாவட்ட நிகழ்ச்சியிலேயே ஒருங்கிணைப்பு குறைபாடு, ஏற்பாட்டு சிக்கல்கள் மற்றும் கட்சியினரின் பங்கேற்பின்மை போன்ற விவகாரங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.