தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நள்ளிரவு அதிர்ச்சி: தூங்கிக் கொண்டிருந்த முதியவரை கத்தியால் குத்திய இருவர் – போலீசார் தீவிர விசாரணை

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நள்ளிரவு அதிர்ச்சி: தூங்கிக் கொண்டிருந்த முதியவரை கத்தியால் குத்திய இருவர் – போலீசார் தீவிர விசாரணை

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில், நள்ளிரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த முதியவரை பணம் கேட்டு மிரட்டி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி முத்து மகன் மைக்கேல் ராஜ் (65) கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தைப் பிரிந்து, தூத்துக்குடி ராஜாஜி பூங்கா பகுதியில் தங்கி யாசகம் பெற்று வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு, மைக்கேல் ராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு வாயில் அருகே படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவரைத் தட்டியெழுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அவரிடம் பணம் இல்லை என கூறியதையடுத்து, ஆத்திரமடைந்த அந்த நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மைக்கேல் ராஜை சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

படுகாயமடைந்த மைக்கேல் ராஜ் உடனடியாக அதே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்துத் தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்.

இதுதொடர்பாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு நபர்களைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு மருத்துவமனை வளாகத்திலேயே நள்ளிரவில் நடந்த இந்த கத்திக்குத்துச் சம்பவம், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.