தூத்துக்குடியில் குடிபோதையில் கனரக டேங்கர் ஓட்டியவர் சிக்கினார்: வாகனம் பறிமுதல் – உரிமம் ரத்து நடவடிக்கை

தூத்துக்குடியில் குடிபோதையில் கனரக டேங்கர் ஓட்டியவர் சிக்கினார்: வாகனம் பறிமுதல் – உரிமம் ரத்து நடவடிக்கை

தூத்துக்குடி நகரில் குடிபோதையில் அபாயகரமாக கனரக வாகனம் ஓட்டிய ஓட்டுநர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், நகர போக்குவரத்து காவல்துறையினர் துறைமுக சாலை – திருச்செந்தூர் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் 25.03.2026 அன்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த டேங்கர் வகை கனரக வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதனை ஓட்டி வந்த உழக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், மூச்சு பரிசோதனை கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர் மது போதையில் இருந்தது உறுதியாக கண்டறியப்பட்டது.

இதையடுத்து, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் அபாயகரமான (Rash Driving) முறையில் ஓட்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, டேங்கர் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், நீதிமன்றத்தின் மூலம் சுமார் ரூ.15,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து, ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை, நகரில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.