தூத்துக்குடியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட பேரவை: 23 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றம்..!

தூத்துக்குடியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட பேரவை: 23 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றம்..!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட பேரவை சனிக்கிழமை தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் கோரிக்கைகள் மற்றும் நிர்வாக மேம்பாடு தொடர்பாக 23 அம்ச தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

பேரவைக்கு மாவட்டத் தலைவர் சோ. மகேந்திர பிரபு தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பி. முத்துப்பாண்டி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் ரா. சீனிவாசன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாநிலத் தணிக்கையாளர் அன்புச்செல்வன் பேரவையைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

மாவட்டச் செயலாளர் லா. அன்றோ வேலை அறிக்கையையும், மாவட்டப் பொருளாளர் மை. ப்ரீமேன் நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்தனர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் திரவியம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் தே. முருகன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் செல்லத்துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ந. வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் அ. பாலாஜி நிறைவுரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் சா. முனியசாமி நன்றியுரை வழங்கினார்.

முக்கிய தீர்மானங்கள்

பேரவையில் மொத்தம் 23 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமானவை:

  • அதிக கிராம ஊராட்சிகளை கொண்ட ஓட்டப்பிடாரம் மற்றும் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை அமைக்க வேண்டும்.

  • தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்து தற்காலிக கணினி உதவியாளர்களையும் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும்.

  • அரசு ஊழியர்களின் குறைகளைத் தீர்க்க மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும்.

  • மாவட்ட ஊராட்சி சத்துணவு பிரிவு மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகுகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலை பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

  • அலுவலர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒருமுறை இலவச முழு உடல் பரிசோதனை செய்யும் வசதி ஏற்படுத்த வேண்டும்.

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு தனி ஊழியர் கட்டமைப்பு உருவாக்க வேண்டும்.

  • ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பதவியை உதவி இயக்குநர் நிலைக்கு உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • பணி ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்யக் கூடாது என்ற அரசாணையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரவையில் வலியுறுத்தப்பட்டது.