அமமுகவில் இருந்து நீக்கம் – உடனே திமுகவில் இணைந்தார் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா!

அமமுகவில் இருந்து நீக்கம் – உடனே திமுகவில் இணைந்தார் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) துணைப் பொதுச்செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜாவை கட்சியில் இருந்து நீக்குவதாக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், கட்சியின் கண்ணியத்திற்கு களங்கமும் அவப்பெயரும் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும், கட்சி ஒழுக்க விதிமுறைகளை மீறியதாலும், மாணிக்கராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அமமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, தனது ஆதரவாளர்கள் மற்றும் அமமுக முக்கிய நிர்வாகிகளுடன் சேர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

திமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கராஜா,

“அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நோக்கத்தை மறந்து, தற்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நான் கட்சியிலிருந்து விலக முடிவு செய்தேன். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நல்லாட்சியை வழங்கி வருகிறார்” என்று தெரிவித்தார்.

இந்த அரசியல் நகர்வு, அமமுக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.