டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் திடீர் சோதனை: தரமற்ற குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்!

டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் திடீர் சோதனை: தரமற்ற குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்!

டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் திடீர் சோதனை: தரமற்ற குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்!

கழுகுமலை பகுதியிலுள்ள டாஸ்மாக் பார்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, தரமற்ற குடிநீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் மாரியப்பன், கோவில்பட்டி ஒன்றிய அலுவலர் ஜோதிபாசு ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று மாலையில் கழுகுமலை பகுதியில் உள்ள டாஸ்மாக் பார்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கழுகுமலை காட்டு நாயக்கன் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையோடு இணைந்த பாரில் பயன்படுத்திய குடிநீர் பாட்டிலில், மீண்டும் குடிநீர் அடைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்த 50 லிட்டர் குடிநீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், பாரில் இருந்த தரமற்ற பிளாஸ்டிக் கப்புகள், அச்சிடப்பட்ட காகிதங்கள், சுகாதாரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். இது தொடர்பாக மதுக்கூட உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், உணவு பாதுகாப்பு உரிமத்தை இடைக்கால ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவும் உணவு பாதுகாப்பு அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று நாலாட்டின்புத்தூர் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கடைக்கு வாகனத்தின் மூலம் குடிநீர் பாட்டில்கள் வினியோகம் செய்த வாகனத்தை சோதனை செய்தனர். அதில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாததும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டும் பாட்டில்களில் நிரப்பி லேபிள் உள்ளிட்ட விபரங்கள் இல்லாமல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாகனத்தில் இருந்த 1,330 லிட்டர் குடிநீர் பாட்டில்களையும், அந்த வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.