பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூங்காக்கள் தயார் : மேயர் ஜெகன் பெரியசாமி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூங்காக்கள் தயார் : மேயர் ஜெகன் பெரியசாமி

போகி பண்டிகை நாளில் வீடுகளில் கழிக்கப்படும் துணிகளை எரிக்க கூடாது. அதை தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்..

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முகாமை தொடங்கி வைத்து மேயர் பேசியதாவது "தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நான்கு மண்டல அலுவலகத்திலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. போகி பண்டிகை நாளில் வீடுகளில் கழிக்கப்படும் துணிகளை எரிக்க கூடாது. அதை தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும்.

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 4 மண்டலங்களிலும் மனுக்கள் குறைந்து வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூங்காக்கள் தயார் படுத்தப்பட்டு வருகிறது. புதிதாக எழில் நகரில் ஒரு பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. தனசேகர் நகரில் உள்ள பூங்கா பணி நிறைவு பெற்றுள்ளது. ராஜாஜி பூங்கா, முத்துநகர் பூங்கா, ரோச் பூங்காவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடியில் சிறு சிறு தெருக்களில் தேவர் பிளாக் ரோடுகள் முழுமையாக போடப்பட்டு விட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் ரோடுகள் போட வேண்டும் அதற்காக அறிக்கை தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் புதிய சாலைகள் அமைக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் மண்டல ஆணையர் முனீர் அகமது, நகர் நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் கீதா முருகேசன், ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.