தூத்துக்குடியில் துறைமுக தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்!
தூத்துக்குடியில் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துறைமுக தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடியில் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துறைமுக தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுக ஆணைய நிர்வாக அலுவலகம் முன்பு துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க (சி.ஐ.டி.யு) சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. தலைவரும், லேபர் டிரஸ்டியுமான எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பி.எஸ்.சுதீந்திரகுமார், செயலாளர் கே.காசி, நீர்வழி போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன செயலாளர் ஆர்.ரசல், சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் ஆர்.பேச்சிமுத்து ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக நீர்வழி போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன தேசிய பொதுச்செயலாளர் டி.நரேந்திரராவ் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
போராட்டத்தில் துறைமுக தொழிலாளர்களுக்கு 1.1.2022 முதல் வழங்க வேண்டிய புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கு தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது. பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் துறைமுக சொத்துக்களை விற்பதை நிறுத்த வேண்டும். துறைமுக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 2020- 2021, 2021- 2022 ஆண்டுகளுக்கான போனசை பேசி முடித்து நிலுவை தொகையை வழங்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் துறைமுகங்களில் ஏற்பட்டுள்ள 33 ஆயிரத்து 957 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். துறைமுக மருத்துவமனைகளை தனியார் பங்கேற்பு என்ற பெயரில் கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கக் கூடாது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தில் துறைமுக தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.