திருச்செந்தூர் அருகே காதல் திருமணத்தை விசாரித்த காவல் உதவி ஆய்வாளருக்கு குத்து: மருத்துவமனையில் அனுமதி!
திருச்செந்தூர் அருகே குலேசகரபட்டிணம் காவல் நிலையத்தில் காதல் திருமணத்தை விசாரித்த காவல் உதவி ஆய்வாளருக்கு ஸ்க்ரூ டிரைவர் குத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் அருகே குலேசகரபட்டிணம் காவல் நிலையத்தில் காதல் திருமணத்தை விசாரித்த காவல் உதவி ஆய்வாளருக்கு ஸ்க்ரூ டிரைவர் குத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் காமராஜ் நகரை சேர்ந்தவர்கள் பவானி, கோகுல் சந்திரசேகர். அடுத்தடுத்து வீட்டில் வசித்து வந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கோகுல் சந்திரசேகர் என்பவர் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். பவானி தூத்துக்குடி மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று மார்த்தாண்டத்தில் வைத்து கோகுல் சந்திரசேகர், பவானி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், பெண்ணை காணவில்லை எனக்கூறி பவானியின் பெற்றோர்கள் குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் கோகுல் சந்திரசேகர், பவானி மற்றும் பவானியின் பெற்றோரை போலீசார் விசாரணைக்காக அழைத்துள்ளனர். மணமக்களாக பவானியும் சந்திரசேகரும் காவல் நிலையத்திற்கு வந்தனர். குலசேகரப்பட்டினம் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் விசாரணை செய்துள்ளார். காவல் நிலையத்திற்குள் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போது பவானியின் அண்ணன் முத்துப்பாண்டி என்பவர் மறைத்து வைத்திருந்த ஸ்க்ரு டிரைவரால் கோகுல் சந்திரசேகர் கழுத்தில் குத்தி உள்ளார். இதைக்கண்ட காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தடுக்க முயன்றபோது அவரது கையில் ஸ்க்ரு டிரைவர் குத்தி காயம் ஏற்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த எஸ்ஐ. ரவிச்சந்திரன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், கோகுல் சந்திரசேகர் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.