திருச்செந்தூர், கோவில்பட்டியில் காலி குடங்களுடன் பொதுமக்கள், பெண்கள் போராட்டம்!
திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் காலி குடங்களுடன் பொதுமக்கள், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் காலி குடங்களுடன் பொதுமக்கள், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூரில் குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தை 19-வது வார்டு பகுதி பொதுமக்கள் குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருச்செந்தூர் நகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட முத்துமாலையம்மன் கோவில் தெரு பகுதியில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் குடிநீர் வினியோகத்துக்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்த வார்டு பகுதி பொதுமக்கள் தனியாரிடம் விலைக்கு தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இதனால் கடும் மனஉளைச்சளுக்கு உள்ளாகியுள்ள இப்பகுதி மக்கள் நேற்று நகராட்சி கவுன்சிலர் மகேந்திரன் தலைமையில் காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு சென்றனர். அங்கு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி, நகராட்சி பொறியாளர் சரவணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இன்று (நேற்று) மாலைக்குள் அந்த பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தினசரி அப்டேட்களை பெற இப்போதே டவுன்லோடு செய்யுங்கள்.... https://play.google.com/store/apps/details?id=com.maac.tutyvision
கோவில்பட்டி
கோவில்பட்டி நகராட்சி 8-வது வார்டு புதுகிராமம் வசந்தம் நகர் 1-வது தெரு பகுதியில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி நேற்று பெண்கள் காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைவில் அப்பகுதியில் சீராக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.