ரயில்வே வேலைவாய்ப்பு மோசடி: ₹26.50 லட்சம் ஏமாற்றிய நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை – தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

ரயில்வே வேலைவாய்ப்பு மோசடி: ₹26.50 லட்சம் ஏமாற்றிய நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை – தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அன்பு நகரைச் சேர்ந்த சிவராமன் (65) என்பவர், 2023ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்களிடம் அறிமுகமாகி, இந்திய இரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக நம்பவைத்து மொத்தம் ரூ.26,50,000/- பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு-I போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-IVல் விசாரிக்கப்பட்டது. நீதிபதி பாக்கியராஜ், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, சிவராமனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.8,000 அபராதம் விதித்து  நேற்று  தீர்ப்பளித்தார்.

வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த மாவட்ட குற்றப்பிரிவு-I காவல் அதிகாரிகள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.மதன் பாராட்டினார்.