தீயணைப்புத் துறையினருக்கு ரூ.6½ லட்சம் பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் வழங்கல்!
தூத்துக்குடியில் தீயணைப்புத் துறையினருக்குரூ.6½ லட்சம் பேரிடர்கால மீட்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.
தூத்துக்குடியில் தீயணைப்புத் துறையினருக்குரூ.6½ லட்சம் பேரிடர்கால மீட்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தீயணைப்பு மீட்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் எஸ்.குமார் தலைமையில தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒத்திகையை நடத்தினர்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டால், அதில் சிக்கியவர்களை எவ்வாறு பத்திரமாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளிப்பது, எவ்வாறு உடனடியாக ஆம்புலன்சு வாகனம் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பது போன்றவற்றை தத்ரூபமாக செய்து காட்டினர். ஆட்சியர் அலுவலகத்தில் தீவிபத்தில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்பது, வலை மூலம் மீட்பது போன்றவற்றை தீயணைப்பு படையினர் செய்து காட்டினர்.
மேலும், மின் கசிவால் ஏற்படும் தீபத்து, பெட்ரோல், டீசல் போன்றவற்றால் ஏற்படும் தீவிபத்து, சமையல் எரிவாயு கசிந்து ஏற்படும் தீவிபத்து போன்ற பல்வேறு வகையான தீவிபத்துக்களில் எளிதாக எவ்வாறு தீயை அணைப்பது என்பது குறித்து ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். முன்னதாக மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பாம்பு பிடிக்கும் கருவி, மீட்பு வலை, மரம் அறுக்கும் கருவி, முழு உடல் கவசம், டார்ச் லைட் உள்ளிட்ட பேரிடர்கால மீட்பு உபகரணங்களை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், சார் ஆட்சியர் கவுரவ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் ராஜூ, தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சகாயராஜ் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து துறை அலுவலர்கள், ஊழியர்கள் பார்வையிட்டனர்.