மக்கள் தொடர்பு முகாமில் ரூ.68.51லட்சம் நலதிட்ட உதவிகள் - ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்!
குப்பணாபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.68.51லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டம், குப்பணாபுரம் கிராமத்தில் இன்று மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் மொத்தம் 214 பயனாளிகளுக்கு ரூ.68,51,461 மதிப்பிலான அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கி தெரிவித்ததாவது: உங்கள் கிராமத்திற்கு நேரடியாக வந்து கோரிக்கை மனுக்களை பெற்று விரைந்து தீர்வு காண்பதற்கு மக்கள் தொடர்பு முகாம் வாய்ப்பாக அமையும்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு, குழந்தைகள், தாய்மார்கள், மாணவ, மாணவிகள், தொழில்முனைவோர் என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்கள் தகுதியான நபர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கமாகும். அப்போதுதான் மக்களின் வாழ்வாதாரம் உயரும். இம்முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்களை நீங்கள் அனைவரும் சென்று பார்க்க வேண்டும். உங்கள் கோரிக்கைகளை தவிர என்னென்ன திட்டங்கள் உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
தாய்மார்கள் உங்களின் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு முயற்சி எடுக்க வேண்டும். தாய்மார்கள் அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தங்களது குழந்தைகளை பரிசோதித்து குறைபாடுகளை கண்டறியும்பட்சத்தில் அந்த குறைபாடுகளை சரிசெய்யும் விதமாக தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை வழங்க வேண்டும். குழந்தைகள் வயதுக்கேற்ற வளர்ச்சி இருந்தால்தான் கல்வி மற்றும் எதிர்காலத்தில் முழுமையான திறமையை வெளிப்படுத்த முடியும். குழந்தைப்பருவத்தில் முதல் 1000 நாட்கள் மிகவும் முக்கியமான காலமாகும்.
தமிழ்நாடு அரசு அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்காக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், மதிய உணவுத்திட்டம், 14 வகையான கல்வி உபகரணங்கள், கற்றலின் இடைவெளியை சரிசெய்வதற்கான இல்லம் தேடிக்கல்வித் திட்டம், இடைநிற்றலை தடுப்பதற்காக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை போன்ற துறைகள் மூலம் கல்வி உதவித்தொகை என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய நான் முதல்வன் திட்டத்தின் மூலம் திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. கல்விதான் அழியாத செல்வம். ஆகையால் மாணாக்கர்களாகிய நீங்கள் பள்ளிக்கல்வி முடித்து கல்லூரி படிக்க வேண்டும். ஒரு தலைமுறை கல்வி பெற்று முன்னேறிவிட்டால், அடுத்த தலைமுறையை பார்த்துக்கொள்வார்கள். பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி படிப்பு படித்து முடித்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகள் மூலமாக தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.
ஆகையால் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். மேலும் தொழில் முனைவோராகவேண்டும் என்றாலும் தொழில்கள் தொடங்குவதற்கு தேவையான வங்கி கடன் உதவி 25 முதல் 35 சதவிகிதம் வரை மானியத்துடன் வழங்கப்படுகிறது. மேலும் இந்த பகுதி விவசாயம் அதிகம் நடைபெறக்கூடிய பகுதியாக உள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை காட்சிப்படுத்தியுள்ளார்கள். ஆகையால் விவசாயிகள் அனைவரும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்து பயன்பெற வேண்டும்.
நமது உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தால்தான் படிக்க முடியும், தொழில் செய்ய முடியும். அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகள் மூலமாக அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைவரும் அரசின் திட்டங்கள் குறித்து நன்கு தெரிந்துகொண்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்று இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 214 பயனாளிகளுக்கு ரூ.68,51,461 மதிப்பில் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. உங்களிடம் இருந்து பெறப்பட்ட முன்னோடி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 80 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. மீதமுள்ள மனுக்களின்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக இம்முகாமில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் போன்ற துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த திட்டவிளக்கக் கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு, திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் மூலம் நடைபெற்ற சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாமில் சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. காய்ச்சல் மற்றும் சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு உரிய ஆலோசனை வழங்கப்பட்டது.
இம்முகாமில் கயத்தார் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மாணிக்கராஜா, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், கயத்தார் வட்டாட்சியர் நாகராஜன், குப்பணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துலட்சுமிவீரபாண்டியன், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் சண்முகத்தாய் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.