தூத்துக்குடி டாஸ்மாக்கில் பெட்டியோடு ஓட்டம்.. அந்த சிவப்பு சட்டை, கருப்பு சட்டையை பிடிங்க சார்!
தூத்துக்குடியில் அரசு மதுபான கடையில் லோடு இறக்கும் போது பீர் பாட்டில்கள் அடங்கிய பெட்டியை இளைஞர்கள் பறித்து சென்றுள்ளனர்.
மின்னல் வேகத்தில் தப்பிச்சென்ற இளைஞர்களின் சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மூலம் மதுபான சில்லறை விற்பனை கடைகள் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 124 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மூலம் அந்த மாவட்டத்தில் உள்ள எல்லா டாஸ்மாக் கடைகளுக்கும் மதுபாட்டில்கள், பீர் பாட்டில் பெட்டி பெட்டியாக லாரிகள் மூலம் தேவைப்படி விநியோகம் செய்யப்படுகிறது.
அப்படித்தான் தூத்துக்குடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக மதுபானங்கள் லாரிகளில் வந்தது. அந்த மதுபானங்களை ஊழியர்கள் , பெட்டி பெட்டியாக எடுத்து டாஸ்மாக் கடைக்குள் கொண்டு சென்றனர். அப்போது திடீரென வந்த மர்ம நபர் ஒருவர் மதுபான பீர் பெட்டியை ஊழியர் போல்வாங்கி கொண்டு அப்படியே பெட்டியோடு தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
முன்னதாக தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஆறு மாதம் முன்பு ஒரு டாஸ்மாக் கடையில் கொள்ளை நடந்துள்ளது. தூத்துக்குடி 2ம் ரயில்வே கேட் அருகில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் வழக்கம் போல் கடந்த ஜனவரி மாதம் இரவு 10 மணி அளவில் டாஸ்மாக் ஊழியர்கள் கடையை பூட்டி சென்றுள்ளார்கள். இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் கடையின் ஷட்டரை உடைத்து கடையில் இருந்த ரூ.1லட்சம் பணம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளை அடித்துச் சென்றார்கள். அதன்பிறகு மதுபாட்டில்களை பெட்டியோடு வழிபறி செய்யப்பட்ட சம்பவம் இப்போது நடந்துள்ளது.
குடிபோதையில் சில இளைஞர்கள், மதுபாட்டில்களை அடிக்கடி டாஸ்மாக் கடைகளில் வந்து திருடி செல்வது தமிழகத்தில் அடிக்கடி நடந்து வருகிறது. மதுபானக்கடைகளில் பூட்டை உடைத்து திருடுவது அல்லது சுவற்றில் துளை போட்டு திருடுவது போன்ற செயல்களில் சில மதுபான திருடர்கள் அடிக்கடி ஈடுபடுவதும் பின்னர் சிசிடிவி காட்சிகளால் கைது செய்யப்படுவதும் நடக்கிறது. அப்படித்தான் தூத்துக்குடியில் அரசு மதுபான கடையில் லோடு இறக்கும் போது பீர் பாட்டில்கள் அடங்கிய பெட்டியை இளைஞர்கள் பறித்து சென்றுள்ளனர். அவர்கள் யார் சென்று விசாரணை நடந்து வருகிறது.