தோட்டத்தில் புகுந்து நாய்கள் கடித்து குதறியதில் 25 ஆடுகள் பலி..!

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் புகுந்து நாய்கள் கூட்டம் கடித்து குதறியதில் 25 ஆடுகள் உயிரிழந்தன.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள தஞ்சைநகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி மகன் சாமுவேல்(36). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் முள்வேலி அமைத்து 25க்கும் மேற்பட்ட ஆடுகளை பராமரித்து வருகிறார். ஆடுகளுக்கு இரவு இரை வைத்து விட்டு மறுநாள் காலையில் தோட்டத்திற்கு வருவது வழக்கம். அதுபோல் இன்று காலை பனையேறும் தொழிலாளி, தோட்டத்திற்கு சென்றபோது தோட்டத்தில் இருந்து நாய்கள் குரைத்தபடி வெளியேறின.
உள்ளே சென்று பார்த்தபோது தோட்டத்தில் 25 ஆடுகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இரவில் நாய்கள் கூட்டம் தோட்டத்தில் புகுந்து ஆடுகளை குதறியதில் செத்து மடிந்து இருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ஸ்ரீதர், விஏஓ ஜாஸ்மின் மேரி, கால்நடை மருத்துவர் சவுந்தர், வனத்துறை அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் சம்பவம் சென்று விசாரணை நடத்தினர். நாய்கள் தாக்கி 25 ஆடுகள் இறந்து விட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என சாமுவேல், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.