தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்..!

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்..!

தூய்மை பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சிஐடியூ சார்பில் காலை முதல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  போராட்டத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி நுழைவு வாயில் அடைக்கபட்டுள்ளது.

அரசாணை 2D/36 நாள் 16.06.2023 (குறைந்தபட்ச ஊதிய குழு)வின் முடிவின்படி ஊராட்சியில் பணிபுரியும் OHT ஆபரேட்டர்களுக்கு ரூபாய் 11,050 மாத ஊதியம் வழங்கிட வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு 10,036 மாத ஊதியமும், தூய்மை காவலர்களுக்கு 10,000 ஊராட்சி மூலம் நேரடியாக வழங்கிட வேண்டும், பொங்கல் போனஸ் அனைவருக்கும் ரூபாய் 3000 வழங்கிட வேண்டும், பணி பாதுகாப்பு சாதனங்கள் அனைவருக்கும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இதற்கு சிஐடியூ மாவட்ட தலைவர் பேச்சிமுத்து தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர்கள் ராமமூர்த்தி வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிஐடியூ மாநில செயலாளர் ரசல், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முனியசாமி, சிஐடியூ மாவட்ட உதவி செயலாளர்கள் முருகன், காசி, ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் மந்திரமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.