எட்டயபுரம் காதணி விழா தகராறு: வாலிபர் வெட்டிக்கொலை – 3 பேர் கைது | தூத்துக்குடி அதிர்ச்சி செய்தி

எட்டயபுரம் காதணி விழா தகராறு: வாலிபர் வெட்டிக்கொலை – 3 பேர் கைது | தூத்துக்குடி அதிர்ச்சி செய்தி

எட்டயபுரம் அருகே நடைபெற்ற காதணி விழாவில் ஏற்பட்ட தகராறு கொலைவழக்காக மாறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்த பெரியநாயகம் (33) என்பவர், இருக்கன்குடி கோவிலில் நடைபெற்ற காதணி விழாவில் கலந்து கொண்டார். விழா நிகழ்ச்சியின் போது அவர் அதிக அளவில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியது.

இதையடுத்து உணவருந்தச் சென்றபோது மீண்டும் தகராறு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் பெரியநாயகம் மினி வேனில் உறங்கிக் கொண்டிருந்தபோது, கவர்னகிரி பகுதியைச் சேர்ந்த முனியசாமி (36), பொன் மாடசாமி (26) மற்றும் மாரிச்செல்வம் ஆகியோர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு மூவரையும் கைது செய்தனர்.

பெரியநாயகத்தின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பெற அவரது உறவினர்கள் மறுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடன்பாடு ஏற்பட்டதையடுத்து உடலை பெற்றுச் சென்றனர்.

இந்த சம்பவம் எட்டயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.